கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 266MW மின்சாரம் எங்களுக்கு வேண்டும் என்று கேரள மின்சாரத்துறை அமைச்சர் திரு. ஆர்யடன் முகமது கேட்கிறார். 2007 ஆம் ஆண்டு மத்திய மின்சாரத்துறை அமைச்சர் முன்பு செய்த ஒப்பந்தப்படி கேரளாவுக்கு கொடுத்தே ஆக வேண்டுமாம். கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் ஷோபாவும் 250MW கர்நாடகாவின் பங்கு தந்தே ஆக வேண்டும் என்கிறார். ஆந்திர அரசும் தன் பங்கினை கண்டிப்பாக கேட்கும். நம் தமிழக முதல்வரும் தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டை போக்குவதற்கு இன்னும் 4000MW மின்சாரம் தேவை. எனவே கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 2000MW(2*1000) மின்சாரமும் எங்களுக்கே வேண்டும் என்கிறார்.
தண்ணீர், மின்சாரம் போன்றவற்றை அனைத்து மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் தான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் தண்ணீர் தருவதில் மேற்சொன்ன இரண்டு மாநிலங்களும் நம்மை எவ்வளவு பாடு படுத்துகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதற்காக நாம் அவர்களுக்கு மின்சாரத்தை கொடுக்க கூடாது என்று அர்த்தம் இல்லை. இதை வைத்து நாம் மற்ற மாநிலங்களோடு ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். இவ்வளவு தண்ணீர் நீங்கள் தாருங்கள் இவ்வளவு மின்சாரம் நாங்கள் தருகிறோம் என்று அவர்களை நிர்பந்திக்க வேண்டும். மத்திய அரசுக்கே இதற்கான முழு அதிகாரம் உள்ளதால் அவர்களும் தமிழக அரசுக்கு இதில் உதவ முன் வர வேண்டும்.
தண்ணீர் பங்கீடு மட்டும் அல்ல, அணு கழிவுகளை அப்புறப்படுவதிலும் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். மின்சாரத்தை பகிர்ந்து அளிக்க மற்ற மாநிலங்கள் உரிமை கொண்டாடுவதை போல கூடங்குளத்தில் இருந்து வெளியேறும் அணு கழிவுகளை சேமித்து வைக்கவும் பிற மாநிலங்கள் முன் வர வேண்டும். அதற்கு நம் தமிழக அரசும் முன் வர வேண்டும். அணு கதிர்வீச்சு அபாயம் நமக்கு. சுனாமி தாக்குதல் பாதிப்பும் நமக்கே. அணு கழிவுகளையும் நாமே சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அதன் மூலம் ஏதாவது பாதிப்பு வந்தால் அதையும் நாமே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் மட்டும் அனைவருக்கும். எந்த ஊர் நியாயம் இது ?
யார் தண்ணீர் தர முன்வருகிறார்களோ? யார் அணு கழிவுகளை சேமித்து வைத்து கொள்ள முன் வருகிறார்களோ? அவர்களுக்கே கூடங்குளம் மின்சாரம் என்று சட்டம் இயற்ற வேண்டும். குட்ட குட்ட நாம் குனிந்தது போதும். இனி குனிய முடியாது. குனிந்து குனிந்து ஏற்கனவே தரை தட்டி விட்டோம். இனி குனிய முடியாது. பாரதிதாசன் அவர்கள் எழுதிய வலியோர் சிலர் பாடலில் வரும் சில வரிகள் என் நினைவுக்கு வருகிறது.
உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா !!!!!!!!!