Friday, February 22, 2013

கூடங்குளம் மின்சாரம் - எனது பார்வையில்

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 266MW மின்சாரம் எங்களுக்கு வேண்டும் என்று கேரள மின்சாரத்துறை அமைச்சர் திரு. ஆர்யடன் முகமது கேட்கிறார். 2007 ஆம் ஆண்டு மத்திய மின்சாரத்துறை அமைச்சர் முன்பு செய்த ஒப்பந்தப்படி கேரளாவுக்கு கொடுத்தே ஆக வேண்டுமாம். கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் ஷோபாவும் 250MW கர்நாடகாவின் பங்கு தந்தே ஆக வேண்டும் என்கிறார். ஆந்திர அரசும் தன் பங்கினை கண்டிப்பாக கேட்கும். நம் தமிழக முதல்வரும் தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டை போக்குவதற்கு இன்னும் 4000MW மின்சாரம் தேவை. எனவே கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 2000MW(2*1000) மின்சாரமும் எங்களுக்கே வேண்டும் என்கிறார்.


தண்ணீர், மின்சாரம் போன்றவற்றை அனைத்து மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் தான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் தண்ணீர் தருவதில் மேற்சொன்ன இரண்டு மாநிலங்களும் நம்மை எவ்வளவு பாடு படுத்துகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதற்காக நாம் அவர்களுக்கு மின்சாரத்தை கொடுக்க கூடாது என்று அர்த்தம் இல்லை. இதை வைத்து நாம் மற்ற மாநிலங்களோடு ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். இவ்வளவு தண்ணீர் நீங்கள் தாருங்கள் இவ்வளவு மின்சாரம் நாங்கள் தருகிறோம் என்று அவர்களை நிர்பந்திக்க வேண்டும். மத்திய அரசுக்கே இதற்கான முழு அதிகாரம் உள்ளதால் அவர்களும் தமிழக அரசுக்கு இதில் உதவ முன் வர வேண்டும். 


தண்ணீர் பங்கீடு மட்டும் அல்ல, அணு கழிவுகளை அப்புறப்படுவதிலும் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். மின்சாரத்தை பகிர்ந்து அளிக்க மற்ற மாநிலங்கள் உரிமை கொண்டாடுவதை போல கூடங்குளத்தில் இருந்து வெளியேறும் அணு கழிவுகளை சேமித்து வைக்கவும் பிற மாநிலங்கள் முன் வர வேண்டும். அதற்கு நம் தமிழக அரசும் முன் வர வேண்டும். அணு கதிர்வீச்சு அபாயம் நமக்கு. சுனாமி தாக்குதல் பாதிப்பும் நமக்கே. அணு கழிவுகளையும் நாமே சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அதன் மூலம் ஏதாவது பாதிப்பு வந்தால் அதையும் நாமே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் மட்டும் அனைவருக்கும். எந்த ஊர் நியாயம் இது ?

யார் தண்ணீர் தர முன்வருகிறார்களோ? யார் அணு கழிவுகளை சேமித்து வைத்து கொள்ள முன் வருகிறார்களோ? அவர்களுக்கே கூடங்குளம் மின்சாரம் என்று சட்டம் இயற்ற வேண்டும். குட்ட குட்ட நாம் குனிந்தது போதும். இனி குனிய முடியாது. குனிந்து குனிந்து ஏற்கனவே தரை தட்டி விட்டோம். இனி குனிய முடியாது. பாரதிதாசன் அவர்கள் எழுதிய வலியோர் சிலர் பாடலில் வரும் சில வரிகள் என் நினைவுக்கு வருகிறது. 

உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா !!!!!!!!!


Friday, February 1, 2013

எனது முதல் வலைப்பதிவு

பல வருடங்களாக எதாவது ஒரு வலைப்பதிவில் பதிய வேண்டும் என்று ஆசை. ஆனால் என்ன எழுதுவது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பம். சரி எதையாவது எழுதியே தீருவது என்று இன்று ஆரம்பித்து விட்டேன். இதோ எனது முதல் பதிவு ,

நம்முடைய  தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தை பற்றி எழுதுகிறேன். ஒரு காலத்தில் மற்ற மாநில போக்குவரத்துக் கழகங்கள் எல்லாம் எண்ணி வியக்கும் படி இருந்த நம் பேருந்துகளின் இன்றைய நிலை? மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அதற்கு Oxygen கொடுப்பதற்காக நம் முதல்வர் பேருந்து கட்டனத்தை 10 வருடங்களுக்கு பிறகு உயர்த்தி உள்ளார். அது  எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது? பார்ப்போம்.



அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் சாதாரணக் கட்டணம், விரைவு, சொகுசு என பல வகைகள் உள்ளன. பெரும்பாலும் அனைத்து பேருந்துகளிலும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளுக்கான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் பேருந்துகளின் வேகமோ ஒரு டிவிஎஸ்-XL அளவு தான். உதாரணத்துக்கு 200 கிலோமீட்டர்  தூரமுள்ள சேலம் - பெங்களுருவை கடப்பதற்கு நமது சாதாரண பஸ்களுக்கு 5.30 மணி நேரம் ஆகிறது. சொகுசு விரைவு பேருந்துகளுக்கு 5 மணி நேரங்கள் ஆகிறது. அனால்   சொகுசு பேருந்துகளில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பயண நேரமோ 4.30 மணி நேரங்கள். அது கூடப் பரவாயில்லை, பெங்களுருவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பேருந்துகளின் நிலையை நினைத்து பாருங்கள். 

பயணத்திற்கு இடையில் இரவு 2 மணிக்கு கூட ஒரு சாலை ஓர உணவகத்தில் உணவுக்கு(?) நிறுத்துவார்கள் பாருங்கள்! அந்த உணவக நுழைவாயிலில் வரும் வாசத்திலேயே(!) நம் உறக்கம் எல்லாம் போய்விடும். சரி உறக்கம் தான் இல்லை என்று ஆகி விட்டதே ஒரு காபி குடிப்போம் என்று குடித்தால் வாழ்கையில் அதன் பிறகு சரவண பவனில் கூட காபி குடிக்க பிடிக்காது. அவ்வளவு சுவை அந்த காபிக்கு. இவ்வளவு கேவலமான உணவகத்தில் ஏன் நிறுத்துகிறார்கள் என்று யோசித்தால் அது அரசின் உத்தரவாம். ஒரு பேருந்திற்கு அந்த உணவக முதலாளி 40 ரூபாய் அரசிற்கு செலுத்த வேண்டுமாம். அது மட்டும் இல்லாமல் ஓட்டுனர் மற்றும் நடத்துனற்கு இலவச உணவு  வேறு. 

இதற்கு எல்லாம் அந்த உணவக முதலாளியிடம் ஏது பணம் என்று ரொம்ப யோசிக்க வேண்டாம். ஒரு 12 ரூபாய் Brittania - Bourbon பிஸ்கட்டின் விலை 20 ரூபாய். பெயர் தெரியாத தண்ணீர் பாட்டிலின் விலை 20 ரூபாய். Pepsi கம்பெனியின் Aquafina-வின் விலையை விட 7/8 ரூபாய் விலை அதிகம். இதை பற்றி எல்லாம் யோசிக்க அரசுக்கு ஏது நேரம்? அனைத்து பேருந்துகளும் சரியாக அந்த உணவகத்துக்கு வந்து செல்கிறதா என்பதை சரி பார்க்க ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டர் வேறு அந்த உணவகத்தில் இருக்கிறார். பேருந்தின் நடத்துனரும் அந்த உணவக அச்சை(சீல்) தனது குறிப்பு சீட்டில் பெற்று செல்ல வேண்டுமாம் பேருந்து  வந்ததுக்கு சான்றாக. அந்த சீலை வைத்து அரசு 40 ரூபாயை பிறகு வாங்கி கொள்வார்களாம். என்னமா யோசிக்கிறாங்க?

அந்த உணவகத்தை விட்டு பேருந்து கிளம்ப ஆரம்பித்த பிறகு தூங்கலாம் என்று எண்ணினால் அதுவரை எங்கே இருந்தது என்றே தெரியாமல் இருந்த மூட்டை பூச்சிகள் கடி இறங்கும் வரை உங்களை தூங்க விடாது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டுகளை விட பேருந்துகளின் தரம் இப்போது பரவாயில்லை. 1990களில் திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் மூலம் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு A/C Sleeper பேருந்துகள் இயக்கிய நம் அரசுப் போக்குவரத்து கழகங்களின் இன்றைய நிலை உண்மையிலேயே வருந்தும் நிலையில் தான் உள்ளது.மீண்டும் பழைய TTC கால நிலைக்கு நம் பேருந்துகள் எப்போது திரும்பும் என்று உங்களோடு நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். நிச்சயமாக அந்த நிலை வெகு அருகில் இல்லை நம் அரசியல் வியா(வா)திகளால்.

                                                                                                            - பஸ் இன்னும் ஓடும் 


 நன்றி: திரு.சகாதேவன் விஜயகுமார் ( For using your picture in my blog ).